தெகுசிகால்பா,
கடல்வாழ் உயிரினங்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் மைக்கி சார்டரிஸ். ஹோண்டுராஸ் நாட்டின் ரோவாடன் தீவில் பல ஆண்டுகளாக ஆழ்கடலுக்குள் சென்று பல்வேறு உயிரினங்களை கண்டு படங்களாகவும் வீடியோ பதிவு செய்து வருகிறார்.
இதில் ஆச்சரியப்படும் வகையில் மீன் ஒன்று நீந்தி செல்வதற்கு பதிலாக தனது துடுப்புகளை கால்களை போல் பயன்படுத்தி கடலின் அடிப்பரப்பில் தரையில் நடந்து சென்றுள்ளது.
பேட்பிஷ் என்றழைக்கப்படும் இந்த மீனின் அடிவாய் பகுதி நன்க சிவந்து காணப்படுகிறது. தலையில் ஒற்றை கொம்பு காணப்படுகிறது. நண்டுகளை போன்று மெதுவாக நடந்து சென்று இரையை தேடுகிறது. பார்ப்பதற்கு சற்று அகோர வடிவுடன் காணப்படுகிறது.
இந்த வகை மீன்களுக்கு நீந்துவதற்கான சவ்வு இல்லை. அதனால் அவை நீரின் அடிப்பரப்பிலேயே வசிக்கின்றன. எனினும், தூண்டி விட்டால் தனது வாலை பயன்படுத்தி அவை நீந்தும். நடந்து செல்ல கூடிய ஒரு சில மீன்களில் இதுவும் ஒன்றாகும்.
இதுவரை பார்த்த உயிரினங்களிலேயே வித்தியாசம் நிறைந்த ஒன்றாக இந்த பேட்பிஷ் உள்ளது. இதுபற்றி முன்பே கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், முதன்முறையாக இதனை படம் பிடித்துள்ளேன் என மைக்கி கூறுகிறார்.
தினமும் நீங்கள் ஆய்விற்காக ஆழ்கடலுக்குள் உள்ளே செல்லும்பொழுது, அரிதாக பவள பாறைகளில் இருந்து வெளிவரும் இந்த மீன்களை எப்பொழுதேனும் காணலாம் என அவர் கூறுகிறார். ஆழ்கடலில் ஆயிரம் அதிசயங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.