ஜெருசலேம்,
இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நேதன் யாஹுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு நாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
டெல் அவிவ் நகரில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்றுமுன்தினம் இரவு பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்களை சந்தித்து பேசினார். இதில் சுமார் 6 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
டெல்லி-மும்பை-டெல் அவிவ் இடையே விமான போக்குவரத்து தொடங்கப்படும். இதன்மூலம் இஸ்ரேல் இளைஞர்களை இந்தியாவுக்கு வருமாறு அழைக்கிறேன்.
இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆகிய குடியுரிமை அட்டைகளை பெறுவதில் உள்ள நடவடிக்கைகளை நிச்சயம் எளிமையாக்குவேன். இஸ்ரேல் நாட்டில் கட்டாய ராணுவ சேவை ஆற்றிய இந்தியர்கள், இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் என்ற அட்டையை பெற தகுதியானவர்கள்.
இஸ்ரேலில் விரைவில் இந்திய கலாசார மையம் ஒன்று விரைவில் அமைக்கப்படும். இந்தியா - இஸ்ரேலுக்கு இடையேயான உறவு பாரம்பரியம், கலாசாரம், பரஸ்பர நம்பிக்கை, நட்பு அடிப்படையிலானது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட இஸ்ரேல் பிரதமர் நேதன் யாஹு, நமஸ்தே என்று கூறி பேச்சை தொடங்கினார். பிரதமர் மோடியை உலக தலைவர் என்று புகழ்ந்தார். நமக்கு இடையே ஒரு மனித பாலம் இருப்பதை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்போம். நாங்கள் உங்களை கண்டு வியக்கிறோம், மதிக்கிறோம், நேசிக்கிறோம். 70 ஆண்டுகாலத்திற்கு பிறகு முதல் இந்திய பிரதமர் இஸ்ரேல் வருகைக்கான வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான தருணம். பிரதமர் மோடியும், நானும் நமது உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம் என்று நேதன் யாஹு கூறினார்.
இந்தியாவின் கொச்சினை (கேரளா) சேர்ந்த யூத இளம்பெண் 50 வருடங்களுக்கு முன்பு இந்தியா-இஸ்ரேல் இடையேயான ஆழமான உறவை விளக்கி கட்டுரை எழுதியிருந்ததையும் நேதன் யாஹு தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமருடன் நேற்று ஹைபா நகரில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்றார். 1918-ம் ஆண்டு ஹைபா நகரை ஜெர்மன் மற்றும் துருக்கி படைகளிடம் இருந்து மீட்டபோது ஏற்பட்ட போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேபோல அங்குள்ள முதலாம் உலகப் போரின் கதாநாயகன் மேஜர் தல்பத் சிங் நினைவிடத்திலும் இரு நாட்டு பிரதமர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.