கோபன்ஹேகன்,
இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டின் மிக பெரிய மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆஸ்டிரா ஜெனிகா கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அந்நிறுவனம் 1.7 கோடி பேரிடம் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பு தரவுகளை சேகரித்து வைத்துள்ளது.
இந்த நிலையில், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியை போட்டு கொண்ட பின்னர் கடந்த மார்ச்சில் ஆஸ்திரியா நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் அந்நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதுபற்றி அந்நாட்டு அரசு ஆய்வில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அந்நாடு தடை விதித்தது.
இதனையடுத்து, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இந்த தடுப்பூசியை தடை செய்தன. ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி போட்டு கொண்ட முதியவர்கள் பலருக்கு ரத்தம் உறைவதற்கான பல சம்பவங்கள் தெரிய வந்துள்ளன என அந்நாடுகள் கவலை தெரிவித்தன.
இதனை தொடர்ந்து, நார்வே அரசும் இந்த தடுப்பூசிக்கு தடை விதித்தது. இதனை தொடர்ந்து அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளும் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைத்தன.
எனினும், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், சேகரித்து வைத்துள்ள பரிசோதனை தரவுகளின் அடிப்படையில், ரத்தம் உறைவதற்கான ஆபத்து பற்றிய எந்த சான்றுகளும் இல்லை என தெரிவித்தது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியால் ரத்த கட்டு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை. தடுப்பூசி போடுவது தொடர வேண்டும் என்பது முக்கியம். அதனாலேயே நாம் உயிர்களை காக்க முடியும். அந்த வைரசால் ஏற்பட கூடிய கடுமையான வியாதியை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தது.
இந்த வேண்டுகோளை, ஐரோப்பிய மருத்துவ கழகமும் முன்வைத்துள்ளது. ஆனால், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்தன. இதனால், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 9 நாடுகள் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு தடை விதித்திருந்தன.
இதனை தொடர்ந்து, ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி பற்றி ஐரோப்பிய மருத்துவ கழகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதனை யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான வயது வரம்பு நிர்ணய பணியிலும் ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிக்கு டென்மார்க் அரசு நிரந்தர தடை விதித்து உள்ளது.
இந்த தடுப்பூசி போடப்படும் 40 ஆயிரம் பேர்களில் ஒருவருக்கு தொடர்ச்சியான ரத்த உறைவு காணப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுபற்றி அந்நாட்டு சுகாதார கழக பொது இயக்குனர் சோரென் பிராஸ்டிரம் கூறும்பொழுது, ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி இன்றி தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்துவது என்பது எங்களுடைய முடிவு.
60 வயது பெண் ஒருவர் இந்த தடுப்பூசி எடுத்து கொண்டதற்கு பின்னர் உயிரிழந்தது சோகம் தரும் விசயம் என கூறியுள்ளார். நீங்கள் பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ளும்பொழுது, அவற்றின் மீது அதிக அளவு நம்பிக்கை மற்றும் அதற்கான ஆதரவு ஆகியவை மிக முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசியை, அந்நாட்டு அரசு தடுப்பூசி போடும் திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது.