அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ, காடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் தீ விபத்து மிக அதிகமாக உள்ளது, மேலும் இது காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பேரழிவு தரக்கூடிய அடியை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடு கடந்த இரண்டு வாரங்களாக எரிந்து வருகிறது. ட்விட்டர் பயனர்கள் பலர், வெப்பமண்டல காடுகள் எரியும் அபாயகரமான சூழ்நிலையை காட்டும் படங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர்.
#PrayforAmazonas ஆகஸ்ட் 21ந்தேதி 249,000 க்கும் மேற்பட்ட ட்வீட்களுடன் உலகின் பிரபலமான ஹேஷ்டேக்காக இருந்தது.
தீ தொடர்ந்து காட்டில் எரிந்து வருகிறது என்பது உண்மைதான் என்றாலும், ஆன்லைனில் பகிரப்படும் பல படங்கள் பழையவை அல்லது பிரேசிலிலிருந்து வந்தவை அல்ல.
நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஆலியா பட் போன்ற பல பிரபலங்களும் இந்த படங்களை பகிர்ந்தவர்களில் அடங்குவர்.
ஆலியா தனது ட்வீட்டில், எங்கள் கிரகத்தின் நுரையீரல் எரிகிறது! #AmazonRainforest சுமார் 3 மில்லியன் வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் மற்றும் 1 மில்லியன்பழங்குடி மக்கள் உள்ளனர் என கூறி உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், 2 வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகளில் பற்றி எறியும் தீயின் புகைப்படங்களை பார்க்கும்போது மிகுந்த மன வேதனையாகவும், அச்சமூட்டும் வகையிலும் இருக்கிறது.
இந்த காடுகள்தான் 20% ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இது நம்மில் ஒவ்வொருவரையும் பாதிக்கும். பூமி காலநிலை மாற்றத்தைத் தக்கவைக்கக்கூடும். ஆனால், நம்மால் அது சாத்தியமில்லை என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், அமேசான் காடுகள் கடந்த சில வாரங்களாக எரிந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான செய்தி. அமேசான் இந்த உலகின் நுரையீரலாக கருதப்படுகிறது. இப்போது இங்கு ஏற்பட்டுள்ள தீ, மிகவும் வருத்தமளிக்கிறது. உலக மீடியாக்களின் கவனத்தை இந்த சம்பவம் ஈர்க்கும் என நம்புகிறேன் என கூறினார்.
இதேபோல் அர்ஜூன் கபூர், பூஜா பத்ரா, ஆயுஷ்மான் குரானா, நடிகர் மகேஷ் பாபு ஆகிய சினிமா பிரபலங்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் தகவல் படி இந்த ஆண்டு 74,155 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்து உள்ளதாக கூறி உள்ளது.
ஆனால் ஆன்லைனில் பரப்பப்படும் பிரபலங்கள் பயன்படுத்தும் நிறைய படங்கள் பழையவை அல்லது தொடர்பில்லாதவையாக இருக்கின்றன.
இந்த படம் 2014 ஆண்டு எடுக்கப்பட்டது. புகைப்படக் கலைஞர் மரியோ தமா எடுத்து உள்ளார். மேலும் இது அமேசான் படுகையில் ஒரு மேய்ச்சல் நிலத்திற்கு அடுத்ததாக எரியும் நெருப்பைக் காட்டுகிறது.