உலக செய்திகள்

உக்ரைனுக்கு எதிரான போரில் பேரிழப்பு; கிரெம்ளின் மாளிகை ஒப்புதல்

உக்ரைனுக்கு எதிரான போரில் படைகளில் முக்கியத்துவம் வாய்ந்த பேரிழப்புகளை சந்தித்து உள்ளோம் என கிரெம்ளின் மாளிகை ஒப்பு கொண்டுள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது தொடர்ந்து 44வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் துறைமுக நகரான மரியுபோலில் ரஷிய படைகள் ஊடுருவலுக்கு பிறகு 5 ஆயிரம் உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.

எனினும், தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் ரஷியாவின் கனவு, உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் உருக்குலைந்து போனது.

இந்த நிலையில் உக்ரைனின் சுமி பிராந்தியத்திலிருந்து ரஷிய படைகள் முழுவதுமாக வெளியேறிவிட்டதாக சுமி கவர்னர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த போரில் ரஷியா தரப்பில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும், இதனை ரஷியா வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பு அதிகாரி டிமிட்ரி பெஸ்கோவ், ஸ்கை நியூசுக்கு அளித்த பேட்டி ஒன்றில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பேரிழப்புகளை சந்தித்து உள்ளது. எங்களது படைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. எங்களுக்கு இது ஒரு பெருத்த சோகம் தரும் விசயம் என கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷிய கூட்டமைப்பை வெளியேற்ற வாக்கெடுப்பு நடத்துவதற்கான அவசரகால சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், ரஷிய கூட்டமைப்பை வெளியேற்றுவதற்கான வரைவு தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இருந்து இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் விலகி இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நாடுகளில் தீர்மானத்திற்கு ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 24 நாடுகளும் வாக்கு பதிவு செய்துள்ளன.

இதனை தொடர்ந்து, ஐ.நா. உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா இடைநீக்கம் செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டது. இது சட்டவிரோதம் என்று கூறி ரஷியா அதனை நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு 50 கோடி யூரோ மதிப்பில் ராணுவ உதவியாக கூடுதல் தொகையை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதனை அந்த அமைப்பின் தலைவர் சார்லஸ் மிச்செல் அறிவித்து உள்ளார்.

இதனால், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுத்தது முதல் இதுவரை மொத்தம், ஐரோப்பிய கூட்டமைப்பு யூரோ மதிப்பில் 150 கோடி ராணுவ உதவியாக உக்ரைனுக்கு வழங்கி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்