பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா அதிபர் மவுரீசியோ மேக்ரியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் பிரதமர் பேசும்பொழுது, தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது என்பது தீவிரவாதத்தினை ஊக்குவிப்பது போன்றது என கூறினார்.
தீவிரவாதம் மற்றும் தீவிரவாத பரவலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் மீது உலக நாடுகள் ஒன்றிணைந்து வலிமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலானது தீவிரவாதத்தினை எதிர்கொள்வது என்பது பற்றிய பேச்சுக்கான நேரம் முடிந்து விட்டது என வெளிப்படுத்தியுள்ளது என கூறினார். இந்த பேச்சில், தீவிரவாதத்தினை எதிர்கொள்வதற்காக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க மேக்ரியிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.
இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், அணு சக்தி மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளில் நீடித்த ஒத்துழைப்பு வழங்குவதற்கான 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் துணை ராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.