கீவ்,
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது.
முக்கியமாக கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களை கைப்பற்ற ரஷிய படையினர் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாக போராடி வருகிறது. இதனால் இந்த 2 நகரங்களை கைப்பற்ற முடியாமல் ரஷிய படைகள் இருந்து வருகிறது.
உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் மக்கள் பலர் போர்க்களத்தில் குதித்துள்ளனர். பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட தங்கள் கைகளில் கிடைத்த பொருட்களை பயன்படுத்தி அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அதே சமயம் போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் மக்களிடம் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, காணொலி வாயிலாக பேசியுள்ளார். அதில், உக்ரைன் மக்கள் தங்கள் நகரங்கள் ஆக்கிரமிக்கப்படும் போது தங்களால் இயன்ற வகைகளில் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இது மிகச்சிறந்த வீரமாகும்.
உங்கள் சுதந்திரத்திற்காக போரிடுங்கள். நாம் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்புகிறோம். உங்கள் எதிர்ப்பை கைவிடவோ, பின்வாங்கவோ வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும் ரஷிய படைகளின் தாக்குதல் குறித்து ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது;-
வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரைனை ரஷ்யா அழித்து வருகிறது. வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் ஏதாவது செய்ய வேண்டும். குறைந்த பட்சம் உக்ரைன் மீதான வான்வெளியை அனைத்து நாடுகளும் மூட வேண்டும். அல்லது போரிட எங்களுக்கு போர் விமானத்தை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.