துபாய்,
மத்திய கிழக்கின் பரம எதிரிகளான ஈரானும் இஸ்ரேலும் நீண்ட காலமாக நேரடி மற்றும் மறைமுக மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான போர் மூண்டது. இதில் இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. சர்வதேச நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது.ஈரானின் அணு ஆயுத தளங்களை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் ஜூன் 22-ஆம் தேதி பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசின. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் தாக்கியது.
பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வந்தது. ஆனாலும் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஒப்பந்தம் எட்டப்படவில்லை.உள்நாட்டில் நடந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பகை மேலும் வலுத்தது.இந்த நிலையில் ஈரானை தாக்கும் நோக்கில் படைகளை டிரம்ப் மத்திய கிழக்குக்கு அனுப்பி வைத்தார். அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் என பெரிய படை கடந்த சில நாட்களாக ஈரானை நோக்கி சென்றது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் நேற்று திடீரென ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இஸ்ரேலுக்கான அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கில் நடத்தப்படும் முன்கூட்டிய தாக்குதல் என இஸ்ரேல் இதை அறிவித்தது.அதன்படி 86 வயதான ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் வீட்டை குறிவைத்து தலைநகர் டெஹ்ரானின் புறநகர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து டெஹ்ரான் மற்றும் ஈரான் முழுவதும் இந்த தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் விரிவுபடுத்தின. நாட்டின் முக்கிய நகரங்கள் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. துபாய், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார். ஆனால் இதனை ஈரான் அதிகாரிகள் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈரான் மீதான துல்லிய தாக்குதல் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று டிரம்ப் கூறியுள்ளார். உலகத்துக்கும் மத்திய கிழக்கிற்கும் அமைதியை ஏற்படுத்த இந்த தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.காமேனியின் நிலை என்ன என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாத நிலையில், அவரது மகள் மற்றும் மருமகன் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ஈரானின் ஃபார்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் உச்ச தலைவர் வீட்டில் இருந்து வெளியான தகவல்படி அவரது மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் கொல்லப்பட்டதாக துரதிருஷ்டவசமான தகவல் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் பாதுகாப்பு அமைச்சரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.