கெய்ரோ,
ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள அல்ஜீரியா நாட்டில் அதிபராக இருப்பவர் அப்தெலாசிஸ் பவுடேபிலிகா. 4-வது முறையாக பதவியில் இருக்கும் அவர், 5-வது முறையாக மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
அல்ஜீரியாவில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீண்டும் போட்டியிடும் திட்டத்தை திரும்ப பெற்ற அப்தெலாசிஸ், வருகிற 18-ந் தேதி நடைபெற வேண்டிய தேர்தலை தள்ளிவைத்தார். எனினும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
இதைத்தொடர்ந்து அல்ஜீரிய ராணுவ தளபதி அகமது கெய்த் சலா, சமீபத்தில் அதிபரை சந்தித்து பேசினார். அப்போது நாட்டில் அரசியல் சாசனத்தின் 102-வது பிரிவை அமல்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். உடல் நலக்குறைவு காரணமாக நாட்டில் அதிபர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கவும், நாட்டை நிர்வகிக்க அரசியல்சாசன குழு ஒன்றை அமைக்கவும் இந்த பிரிவு வழி வகுக்கிறது.
அந்த அடிப்படையில் அதிபர் அப்தெலாசிஸ் புதிய மந்திரி சபையை தற்போது அமைத்து உள்ளார். இதன் மூலம் அவர் பதவி விலக திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. உடல் நலக்குறைவை காரணம் காட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் பதவி விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது.