துபாய்,
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. 3 நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.
இதற்கு துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும், பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்த ஒப்பந்தம் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவும், ஐக்கிய அரபு அமீரகமும் கூறி வருகிறது. இந்த ஒப்பந்ததை ஐ.நா.வும், சீனா உள்ளிட்ட நாடுகளும் வரவேற்றுள்ளன.
இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான தூதரக ஒப்பந்தத்தின் முதல்படியாக இரு நாடுகளுக்கும் இடையே தொலைபேசி சேவை தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள சர்வதேச பத்திரிக்கையாளர்கள் லேண்ட்லைன் மற்றும் செல்போன் வழியாக ஒருவருக்கொருவரை தொடர்பு கொள்ள முடிந்ததாக தெரிவித்தனர்.