யாங்கன்,
மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையின மக்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில், அங்கிருந்து 7 லட்சத்திற்கும் கூடுதலான ரோஹிங்யா மக்கள் தப்பி வங்காளதேச நாட்டில் அடைக்கலம் புகுந்தனர். அவர்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் கண்காணிப்பு கும்பல்கள் கொலை, கற்பழிப்பு மற்றும் தீ வைப்பு ஆகிய தாக்குதல்களில் ஈடுபட்டனர் என தப்பி வந்தவர்கள் தொடர்ச்சியாக கூறிவந்தனர்.
இந்த நிலையில், ஐ.நா.வுக்கான மனித உரிமைகள் அமைப்பின் உதவி பொது செயலாளர் ஆன்ட்ரூ கில்மோர், வங்காளதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வந்து சேர்ந்துள்ள புதிய ரோஹிங்யா மக்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மியான்மர் நாட்டில் இருந்து ரோஹிங்யா மக்களின் இனஅழிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. நான் கண்ட மற்றும் கேட்டவற்றில் இருந்து வேறு எந்த முடிவையும் நாம் கொண்டு வரமுடியும் என நான் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.
கடந்த வருடம் நடந்த கொலை மற்றும் கற்பழிப்பு என்பதில் இருந்து வன்முறையானது, தீவிரவாதம் மற்றும் வலுக்கட்டாய பட்டினி போடுதல் ஆகியற்றிற்கு உருமாறியுள்ளது.
மியான்மர் அரசு ரோஹிங்யா மக்களை வரவேற்கிறோம் என உலகிற்கு கூறி வருகிறது. ஆனால் அதன் படைகள் அவர்களை வங்காளதேசத்திற்கு தொடர்ந்து விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளது. தற்பொழுதுள்ள நிலையில் பாதுகாப்பு நிறைந்த, கண்ணியமிக்க முறையில் நிலையாக மக்கள் திரும்புவது என்பது சாத்தியமற்றது என அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஆகஸ்டில் குறைந்தது 6 ஆயிரத்து 700 ரோஹிங்யா மக்கள் கொல்லப்பட்டு இருக்க கூடும் என திட்டமதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.