உலகளவில் திரையுலகம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல், உலகை இன்றளவுக்கும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தோன்றி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் ஒட்டுமொத்த மனித குலமும் பாதித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றை இப்போதைக்கு முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று உலக தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு திறந்த கடிதத்தை ஹாலிவுட் நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறி இருப்பதாவது:-
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 2 சதவீத மக்களுக்குத்தான் தடுப்பூசி கிடைத்துள்ளது. இதனால் எஞ்சிய மக்கள் உலகின் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் கொரோனாவை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது. இந்த நிலைமை, டெல்டா போன்ற புதிய வகை வைரஸ்கள் உருவாகவும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அழிக்கவும் உதவுகிறது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள தலைவர்கள், கொரோனா தொற்றை எல்லா இடங்களிலும் இப்போதைக்கு முடிவுக்கு கொண்டு வர தைரியமாக ஒன்றிணைந்து செயல்படுமாறு அழைக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் அலிசா மிலானோ, ஆன்னி ஹாத்வே, டெப்ரா மெஸ்சிங், ஈவா லாங்கோரியோ, மாலின் அகர்மேன், டெபி ஆலன், ஜோர்டானா புரூஸ்டர், கோனி பிரிட்டன், சியாரா உள்பட பலரும் கையெழுத்து போட்டுள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.