இஸ்லாமாபாத்,
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் சமீபத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்பினார். இதற்கு இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து நேற்று நாடு திரும்பிய அவர், இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்த கட்சி தொண்டர்களிடையே இது குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்பது ஜிகாத் ஆகும். இதை நாங்கள் கடவுளுக்காக செய்வோம். காஷ்மீரிகளை உலக நாடுகள் ஆதரித்தாலும் அல்லது கைவிட்டாலும், நாங்கள் அவர்களுக்கு துணை நிற்போம் என்று தெரிவித்தார்.
இது ஒரு போராட்டம் என்று கூறிய இம்ரான்கான், இந்த விவகாரத்தில் சூழல் சரியாக அமையாவிட்டாலும் மக்கள் மனம் தளரக்கூடாது எனவும், பாகிஸ்தான் மக்கள் காஷ்மீரிகளுக்கு ஆதரவாக இருந்தால், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறினார்.