உலக செய்திகள்

ரஷியாவை வெளியேற்றுக; ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உக்ரைன் ஆவேசம்

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியாவை வெளியேற்ற வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

தினத்தந்தி

நியூயார்க்,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது தொடர்ந்து 43வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் துறைமுக நகரான மரியுபோலில் ரஷிய படைகள் ஊடுருவலுக்கு பிறகு 5 ஆயிரம் உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.

ரஷியா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தயராகியுள்ளன. ஐ.நா.வில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஜி 7 நாடுகள் வலியுறுத்தி இருந்தன.

உக்ரைனில் ரஷியாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதினின் இரண்டு மகள்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷிய வங்கிகள் மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது. ரஷியாவின் ஸ்பெர் வங்கி, ஆல்பா வங்கி ஆகியவை அமெரிக்க நிதி அமைப்பை தொடர்புகொள்ள முடியாது. இந்த வங்கிகளை அமெரிக்கர்களும் பயன்படுத்த இயலாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியாவை வெளியேற்ற வாக்கெடுப்பு நடத்துவதற்கான அவசரகால சிறப்பு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான உக்ரைன் பிரதிநிதி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷிய கூட்டமைப்பின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒரு வாய்ப்பல்ல. அது ஒரு கடமை என கூறியுள்ளார்.

ஐ.நா. பொது சபையில் ரஷியா சார்பிலான பிரதிநிதி பேசும்போது, இந்த வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும், நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளுக்கான கட்டமைப்பை அழிக்கும் மேற்கத்திய நாடுகள் மற்றும் அவர்களுடைய கூட்டணி நாடுகளின் முயற்சிக்கு எதிராக வாக்களிக்கவும், உண்மையில் உங்களுடைய முடிவை பரிசீலனை செய்யவும், அவையில் கூடியுள்ள அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம் என கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்