உலக செய்திகள்

விஜய் மல்லையாவிற்கு பின்னடைவு, சிபிஐ கொடுத்த ஆதாரங்களை லண்டன் கோர்ட்டு ஏற்றது

விஜய் மல்லையாவிற்கு பின்னடைவாக வங்கி மோசடியில் சிபிஐ கொடுத்த ஆதாரங்களை லண்டன் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. #VijayMallya #BJP

தினத்தந்தி

லண்டன்,

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டார். பிரிட்டனுக்கு தப்பி சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா ஏற்கெனவே அறிவித்தது. அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நகர்வில் முன்னேற்றம் காணப்படவில்லை.

எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடனைத் திருப்பி செலுத்தாதது மட்டுமின்றி, பல்வேறு காசோலை மோசடி வழக்குகள், தொழில் செய்வதாக வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டில் சொத்து வாங்கியது, அன்னிய செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மல்லையா மீது உள்ளன. ஐடிபிஐ வங்கியில் ரூ.720 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாக கைது ஆணையை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்தது.

இவ்வழக்கில் அவரை நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரிட்டனில் தேடப்படும் நபராக அறிவிக்கப்படும் வெளிநாட்டவர், உச்ச நீதிமன்றம் வரை அணுகுவதற்கு அந்நாட்டு சட்டத்தில் இடம் உண்டு. பிரிட்டனில் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. இந்திய தூதரகம், வெளியுறவுத்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு என அனைத்து தரப்பிலும் அதற்கான நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றது. லண்டன் கோர்ட்டில் இந்தியா தரப்பில் மல்லையாவிற்கு எதிராக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

விஜய் மல்லையாவிற்கு பின்னடைவாக வங்கி மோசடிகளில் அவருடைய சதிதிட்டம் தொடர்பாக சிபிஐ அளித்த ஆதாரங்களை லண்டன் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றியதில் மல்லையாவின் சதிதிட்ட பங்களிப்பு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வழங்கி உள்ளது. லண்டன் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பான கேள்விக்கு மல்லையா பேசுகையில், இறுதி தீர்ப்பு வெளியாகும் வரையில் காத்திருக்க வேண்டும், என்றார். இவ்வழக்கில் அடுத்த விசாரணை ஜூலையில் நடைபெறுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்