காத்மாண்டு,
நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் இன்று காலை 9.55 மணிக்கு நான்கு இந்தியர்கள் உட்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமாகியது.
நேபாளத்தில் நேற்று விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 22 பேரில், இந்தியாவை சேர்ந்த விவாகரத்து பெற்ற தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் யார் என்பதை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவர்கள் அசோக் குமார் திரிபாதி, அவரது மனைவி வைபவி பண்டேகர், மகன் தனுஷ் திரிபாதி மற்றும் மகள் ரித்திகா திரிபாதி ஆகியோர் ஆவர்.
வைபவி பெந்த்ரே(51), அவரது முன்னாள் கணவர் அசோக் குமார் திரிபாதி (54) மற்றும் அவர்களது மகன் தனுஷ் (22) மற்றும் மகள் ரித்திகா (15) என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த பெண்ணும் குழந்தைகளும் தானேயில் வசித்து வந்த நிலையில், அவரது முன்னாள் கணவர் ஒடிசாவில் வசித்து வந்தார்.
வைபவி-அசோக் குமார் தம்பதியினர், தங்களூடைய விவாகரத்துக்குப் பிறகு, அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஒன்றாக கூடியிருக்க வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவுப்படி, இந்த ஆண்டு 10 நாள் விடுமுறைக்காக நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் மேற்கண்ட 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர்.
இதுவரை 21 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஒருவரின் உடலை மீட்கும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிர்ச்சியில் இருந்த அவரது சகோதரி ஊடகங்களிடம் இதுகுறித்து அதிகம் பேசவில்லை.