லாகூர்,
பாகிஸ்தான் நாட்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த பின் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். ஷபாஸ் ஷெரிப் புதிய பிரதமரானார்.
இவர் மீதும், இவரது மகன் ஹம்சா ஷெரிப் மீதும் பணமோசடி வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை அந்நாட்டின் மத்திய புலனாய்வு முகமையின் இயக்குனராக நியமிக்கப்பட்ட முகமது ரிஸ்வான் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்த ரிஸ்வான் விடுமுறை எடுத்து சென்று விட்டார். இதனை தொடர்ந்து, முகமையின் துணை இயக்குனரான நஜியா ஆம்ப்ரீன் அந்த பதவியை ஏற்றுள்ளார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகனுக்கு எதிரான பணமோசடி வழக்கை விசாரித்த ரிஸ்வானுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவரை லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சையில் பலனின்றி அவர் இன்று காலமானார்.