பீஜிங்,
சீனாவின் குவாங்டாங் மாகாணம் தான்சூ நகரில் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து, பணிகளை தொடங்கினர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக கடையில் திடீரென தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் மளமளவென பரவிய தீ கடை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறிஅடித்தபடி கடையை விட்டு வெளியே ஓடினர். ஆனால் கடையின் நாலாபுறமும் தீ சூழ்ந்து கொண்டதால் சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
இதற்கிடையில் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி ஊழியர்களில் 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். இரும்பு கடையில் தீப்பிடித்தது எப்படி என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.