உலக செய்திகள்

இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம்: ஏர் இந்தியா முடிவால் பயணிகள் கவலை

இஸ்ரேலில் வசிக்கும் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

புதுடெல்லி,

அமெரிக்கா - ஈரான் போரால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேற்காசியாவில் பதற்றம் நிலவுகிறது. அவ்வப்போது வான்வழி தாக்குதல்களும் பிராந்தியத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பயணிகல் வருகை குறைந்ததாலும், பல்வேறு நிறுவனங்களும் விமான சேவைகளை நிறுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவும் சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது.

அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, "புது தில்லி - டெல் அவிவ் வழித்தடத்தில் மே 31 வரை விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன." என்றார். இஸ்ரேலின் விமான நிறுவனங்கள் மட்டுமே கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விமான சேவை வழங்கி வருகின்றன.

விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது, இஸ்ரேலில் வசிக்கும் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள், தரைவழி எல்லைகள் வழியாக ஜோர்டான் அல்லது எகிப்து நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து பயணிக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கூடுதல் நேரம் ஆவது மட்டுமின்றி, செலவும் அதிகரிக்கும். ஆபத்தான சூழலில் இப்படியான ஒரு முடிவை எடுத்துள்ள ஏர் இந்தியா தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.