கவுதமாலா சிட்டி,
ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முஸ்லிம் நாடுகள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது. ஆனால் அமெரிக்கா அதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது.
ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா உள்பட 128 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது.
ஐநா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடுகளில் ஒன்றாக கவுதமாலா, டெல் அவிவ் நகரில் உள்ள தனது தூதரகத்தை ஜெருலேமுக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கவுதமாலா அதிபர் ஜிம்மி மோராலெஸ் கூறியுள்ளார். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலா, அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.