Photo Credit:AFP 
உலக செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து முன்னரே தகவல் கிடைக்கவில்லை: சிறிசேனா

ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த சிறிசேனா நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய போது தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் தினத்தில், கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 3 ஆடம்பர விடுதிகள் ஆகியவற்றில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தினர். இதில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் கொல்லப்பட்டனர். அப்போது இலங்கை பிரதமராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க. ஜனாதிபதியாக இருந்தவர் சிறிசேனா.

இந்த நிலையில், தாக்குதல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையை கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா, தாக்குதல் குறித்து முன்னரே அறிந்து இருந்ததாகவும் அது தொடர்பான தகவலை அப்போதைய பிரதமரிடம் உரிய முறையில் பகிரவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த சிறிசேனா நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய போது தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் தனிப்பட்ட முறையில் தாக்குதல் குறித்து நான் முன்கூட்டியே எதையும் அறிந்திருக்கவில்லை.

உளவுத்துறை தகவல்களை பற்றி எனக்கு தெரிந்திருந்தால், நான் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, தேவாலயங்களை பாதுகாத்து, அவர்களை கைது செய்து தாக்குதல்களை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்து இருப்பேன். நான் தாக்குதல் குறித்து முன்னரே அறிந்திருந்தேன் எனது பொறுப்புகளை புறக்கணித்தேன் எனக் கூறும் யாவரும் மனநலம் சரியில்லாதவர்களாக இருப்பார்கள் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து