Image Courtesy: AFP 
உலக செய்திகள்

இலங்கை நெருக்கடி நிலையை சமாளிக்க தகுதியான அடுத்த பிரதமர் யார்...?

பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே திருகோணமலை கடற்கரைபகுதியில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு

தீவு நாடான இலங்கையில் 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து, இறக்குமதிக்கும் வழியில்லாமல் போனது. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை. இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எனினும், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இந்த வன்முறைகளில் ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனாவின் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். 217 பேர் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன். தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் தீர்வு இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வெற்றியடையாது என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறும்போது, இலங்கையில் ராஜபக்சேக்கள் இல்லாத அமைச்சரவையை நியமிப்பேன் என அறிவித்து உள்ளார்.

இந்த புதிய அமைச்சரவை அரசியல் சாசன சீர்திருத்தங்களை கொண்டு வரும் என கூறப்படுகிறது. இதனால், ராஜபக்சேக்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் மனப்பான்மையில் சற்று மாற்றம் ஏற்படும். அதனுடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று அல்லது நாளை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அதிபர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுகிய காலத்திற்கேனும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அதிபர், ரணில் விக்ரமசிங்க-விடம் கோரியதாகவும், அவரின் அழைப்பை ஏற்று பிரதமர் பதவியை ஏற்க ரணில் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.

அதிபர் கோத்தபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கவும் நேற்று ஆலோசனை நடத்தினர். இது சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.

விக்கிரமசிங்க இந்த விருப்பத்தை பரிசீலித்து வருவதாக நம்பகமான வட்டாரம் தெரிவித்தது, கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் நீடித்த அரசியல் நெருக்கடியின் போது பேச்சுக்களின் உணர்திறன் காரணமாக பெயரை வெளியிட வேண்டாம் என்று கோருகிறது.

இதன் போது அதிபர் செயலகம் முன்பு நடைபெற்றுவரும் அமைதியான போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என ரணில் அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதற்கு அதிபர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.

அதேவேளை, புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் தான் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவிற்கு தங்களது ஆதரவை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே திருகோணமலை கடற்கரைபகுதியில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிக்க ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பெரும்பான்மை ஆதரவுடன் ரணில் பதவி ஏற்கலாம் என கூறப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்