டாக்கா,
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 73). இவருக்கு ஊழல் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டாக்கா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவர் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதியுற்று வருகிறார். கலீதா ஜியாவுக்கு தேவையான சிறப்பு சிகிச்சை அளிக்க வங்கதேச அரசு நிர்வாகம் மறுத்து, அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக டாக்கா ஐகோர்ட்டில் வக்கீல் ஜைனல் அபேதின் முறையிட்டார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு தேவையான உயர் சிகிச்சை அளிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று அவர், டாக்காவில் உள்ள வங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக அவரை அந்த மருத்துவமனையின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல்லா அல் ஹாரூண், மூத்த டாக்டர்களுடன் சென்று பார்த்தார்.
அதையடுத்து கலீதா ஜியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பிரிகேடியர் ஜெனரல் அப்துல்லா அல் ஹாரூண் நிருபர்களிடம் பேசுகையில், அவர் எத்தனை நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதை டாக்டர் குழு தீர்மானிக்கும் என்று கூறினார்.