உலக செய்திகள்

ஜாம்பியா முன்னாள் அதிபர் மீது கற்பழிப்பு புகார்: அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜாம்பியா முன்னாள் அதிபர் தன்னை கற்பழித்ததாக அந்நாட்டின் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார்.

தினத்தந்தி

பஞ்சுல்,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஜாம்பியா. இங்கு தொடர்ந்து 22 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் யஹ்யா ஜம்மே. 1994-ம் ஆண்டு நடந்த ராணுவ புரட்சியின் மூலம் தனது 29 வயதில் ஆட்சி பொறுப்பு ஏற்றார்.

அதன் பின்னர் ஒரு சர்வாதிகாரியை போல் ஆட்சியை நடத்தி வந்த அவர், தனது அரசியல் எதிரிகளையும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்களையும் தயவு தாட்சண்யம் இன்றி மரணதண்டனை விதித்து கொன்று குவித்தார்.

அதோடு ஓரின சேர்க்கைக்கு எதிரான இவர், ஓரின சேர்க்கையாளர்கள் தன் கண்ணில்பட்டால் தலையை துண்டித்து கொலை செய்வேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தவர் ஆவார்.

கடந்த 2013-ம் ஆண்டு பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய யஹ்யா ஜம்மே, கடவுள் விரும்பினால் 10 லட்சம் ஆண்டுகளுக்கு நான் அதிபராக இருப்பேன், என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று முழங்கினார்.

ஆனால் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி பெரும் தோல்வியை சந்தித்ததால், 2017 ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர் அடாமா பாரோ அதிபரானார். இதையடுத்து யஹ்யா ஜம்மே ஆட்சி காலத்தில் நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்க விசாரணைக்குழுவை அடாமா பாரோ அமைத்தார்.

இந்த விசாரணைக்குழு யஹ்யா ஜம்மே மீதான பாலியல் புகார்கள் குறித்தும் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் ஜாம்பியாவின் முன்னாள் அழகி பாதோவ் டவ்பா ஜாலோ, யஹ்யா ஜம்மே அதிபராக இருந்தபோது தன்னை கற்பழித்ததாக பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து பாதோவ் டவ்பா ஜாலோ கூறியதாவது:-

2014-ம் ஆண்டு நான் அழகி பட்டம் பெற்றதும் யஹ்யா ஜம்மேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அதன் பின்னர் அவர் அடிக்கடி என்னை சந்தித்தார். அவர் எனக்கு ஒரு தந்தை போல் நடந்து கொண்டார். அறிவுரை சொல்வது, பரிசுகள் மற்றும் பணம் வழங்குவதோடு குடும்பத்துக்கு தேவையான உதவிகளையும் செய்தார்.

2015-ம் ஆண்டில் ஒருநாள் எனது வீட்டில் அவருக்கு விருந்து அளித்தபோது, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி என்னிடம் கேட்டார். அதை கேட்டு நான் அதிர்ந்து போனேன். அவரது திருமண ஆசையை நிராகரித்துவிட்டேன். அதன்பின்னர் ஒருநாள் அதிபரின் உதவியாளர் என்னை அதிபரின் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அங்கு, திருமணத்துக்கு மறுத்ததால் என் மீது ஆத்திரத்தில் இருந்த யஹ்யா ஜம்மே என்னை சரமாரியாக தாக்கி, எனக்கு மயக்கி ஊசிபோட்டார். நான் பாதி மயங்கிய நிலையில் இருக்கும்போதே எனது ஆடைகளை களைந்து என்னை கற்பழித்தார். இந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் பல நாட்கள் நான் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். அதன்பின்னர் நான் செனகல் நாட்டுக்கு சென்றுவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது ஈக்குவடோரியல் கினியா நாட்டில் வசித்து வரும் யஹ்யா ஜம்மே, தன் மீதான இந்த கற்பழிப்பு குற்றச்சாட்டு குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்