தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்த 4 இளம்பெண்களிடம் துபாயில் நிகழ்ச்சி மேலாண்மை செய்யும் நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறோம் என இங்குள்ள ஏஜெண்டுகள் சிலர் கூறியுள்ளனர். இதனை நம்பி 4 பேரும் துபாய்க்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் 20 வயது நிறைந்தவர்கள்.
ஆனால் அங்கு சென்றவுடன் நிறுவன உரிமையாளர் அவர்களை கூண்டு பறவை போல் அறையில் பூட்டி வைத்து விட்டார். பின்னர் டான்ஸ் பார் ஒன்றில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் நடனம் ஆடும் பணியில் 4 இளம்பெண்களையும் ஈடுபடுத்தி உள்ளனர். அவர்களில் ஒருவர் தனது குடும்பத்திற்கு வாட்ஸ்அப் வழியே தகவல் அனுப்பி உள்ளார்.
இதுபற்றி அறிந்த இந்திய வெளிவிவகார இணை மந்திரி வெல்லம்வள்ளி முரளீதரன் உடனடியாக அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார். அங்கிருந்து துபாய் போலீசாருக்கு தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் உதவியுடன் 4 இளம்பெண்களும் மீட்கப்பட்டு கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். துபாய்க்கான இந்திய தூதர் விபுல் தமிழக அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். வேலை தேடி துபாய்க்கு வருவதற்கு முன் தங்களது விசா விவரங்களை ஆய்வு செய்யும்படி அனைவரும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.
கடந்த வருடமும் இதேபோன்று இந்திய தூதரகம் கேட்டு கொண்டதன்பேரில் டான்ஸ் பார் ஒன்றில் இருந்து சில இளம்பெண்களை துபாய் போலீசார் மீட்டனர்.