உலக செய்திகள்

4 ஆண்டுகளுக்கு முன் நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது

மாயமான மலேசிய விமானம் என்றாவது ஒருநாள் கண்டுபிடிக்கப்படும் என ஆஸ்திரேலிய மந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கான்பெர்ரா,

4 ஆண்டுகளுக்கு முன்னர் நடுவானில் காணாமல்போன மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ தேடும் பணி முடிவுக்கு வந்தது. என்றாவது ஒரு நாள் அந்த விமானத்தின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்படும் என ஆஸ்திரேலிய மந்திரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மலேசிய விமானம் எம்.எச்.370, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி, அந்த நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்ளிட்ட 227 பயணிகளும், 12 ஊழியர்களும் இருந்தனர். இந்த விமானம் புறப்பட்டு சென்ற 30 நிமிடங்களில் ரேடார் திரையில் இருந்து மறைந்தது. அதைத் தொடர்ந்து அந்த விமானம், மாயமாகிவிட்டது உறுதியானது. ஆனால் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து முதலில் தென் சீனக்கடல் பகுதியில் தேடல் படலம் நடந்தது. ஆனால் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி, அந்த விமானம் தென்திசைக்கு திருப்பப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்ததால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடல் வேட்டை நடந்தது. மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து ஏறத்தாழ 3 ஆண்டுகள், இந்தியப் பெருங்கடலில் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு தேடியும், மாயமான அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன்காரணமாக அந்த விமானத்தைத் தேடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த விமானத்தில் பயணம் செய்த சென்னைப் பெண் சந்திரிகா சர்மா உள்ளிட்ட 239 பேரும் பலியாகிவிட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தினர், மாயமான விமானத்தை தேடும் பணியை தனியார்வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த தனியார் கடற்படுகை ஆய்வு நிறுவனமான ஓசியன் இன்பினிட்டி, மாயமான மலேசிய விமானத்தை தேட முன்வந்தது. இதற்காக அந்த நிறுவனத்துடன் மலேசியா கடந்த ஜனவரி மாதம் ஒரு ஒப்பந்தம் போட்டது.

அதைத்தொடர்ந்து மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியை ஓசியன் இன்பினிட்டி நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிறுவனம், ஆழ்கடல் கலன்களை (அண்டர்வாட்டர் சோனார் ட்ரோன்) பயன்படுத்தி, எம்.எச்.370 விமானத்தை தேடி வந்தது. கடலில் 96 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது. ஆனால் அந்த விமானத்தின் சிதைவுகளைக் கூட கண்டுபிடிக்கமுடியாமல் போய்விட்டது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணி முறைப்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது.

இதுபற்றி ஆஸ்திரேலிய போக்குவரத்து மந்திரி மைக்கேல் மெக்கார்மக் கூறும்போது, விமான வரலாற்றில் எம்.எச். 370 விமானத்தை 4 ஆண்டுகள் தேடி வந்ததுதான், இதுவரை நடைபெற்ற மாயமான விமான தேடுதல் வேட்டைகளில் மிகப்பெரியதாகும். தொழில்நுட்பத்தின் உச்சம் வரை சென்று தேடப்பட்டது. ஆனால் பலன் இல்லை. இந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரது குடும்பங்களுடன் எங்கள் நினைவு இருக்கும். என்றாவது ஒரு நாள் இந்த விமானத்தின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்படும் என்று இப்போதும் நாங்கள் நம்புகிறோம் என குறிப்பிட்டார்.

இந்த தனியார் நிறுவன தேடுதல் வேட்டைக்கு பின்னரும்கூட மாயமான விமானம், விமானியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததா அல்லது அவரது கட்டுப்பாட்டை இழந்து கடலில் மோதியதா என்ற முடிவுக்கு நிபுணர்களால் வர முடியாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்