பாரீஸ்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது.
இந்த தாக்குதல் நடந்த இடம் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் தூதர்களின் வீடுகள் ஆகியவை அடங்கிய பகுதியாகும். பாதுகாப்பு அதிகம் நிறைந்த இந்த பகுதியில் ஜனாதிபதி மாளிகையும் உள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த பகுதி முழுவதும் ரோடுகள் மூடப்பட்டன. ஏராளமான கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. காயம் அடைந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டு தூதரகங்கள் சேதம் அடைந்துள்ளன என பிரான்ஸ் நாட்டு மந்திரி கூறியுள்ளார்.
இதுபற்றி ஐரோப்பிய விவகார துறை மந்திரி மேரியெல்லி டி சர்னேஜ் கூறும்பொழுது, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தூதரகங்கள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சேதம் அடைந்துள்ளன என்ற தகவல் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.
இந்த இரு தூதரகங்களிலும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.