லண்டன்,
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு ஜி-7 என்ற அமைப்பு செயல்படுகிறது.
இந்த கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, இங்கிலாந்து கார்ன்வால் மாகாணத்தில் உள்ள கார்பிஸ் பே ஓட்டலில் நேற்று தொடங்கியது. கொரோனா பாதிப்புக்கு பின்னர் சுமார் 2 ஆண்டுகள் கழித்து ஜி-7 கூட்டமைப்பின் தலைவர்கள் நேரடியாக ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும்.
அதன் பின்னர் ஜி-7 கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனாவுக்கு பிந்தைய நிகழ்வுகள் மற்றும் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கபப்ட்டது.
இந்நிலையில், கொரோனா வைரசை எதிர்த்து போராட ஒரே ஆயுதமான தடுப்பூசியை உலக நாடுகளுக்கு வழங்க ஜி-7 கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் உலகின் ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஜி-7 கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
அதிலும், 50 கோடி தடுப்பூசிகளை அமெரிக்காவும், எஞ்சிய 50 கோடி தடுப்பூசிகளை மீதமுள்ள ஜி-7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் இணைந்து வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க ஜி7 கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த முடிவிற்கு ஐ.நா., உலக சுகாதார அமைப்பு உள்பட பல்வேறு தரப்பும் பாராட்டு தெரிவித்துள்ளன.