ஹூஸ்டன்,
அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், மினியாபொலிஸ் நகரில் போலீசார் பிடியில் கடந்த 25-ந் தேதி கொலை செய்யப்பட்டது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலையில் நீதி கோரி கருப்பர் இன மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்குகளையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கி தொடர்ந்து 8-வது நாளாக போராடி வருகின்றனர்.
இப்போது வன்முறையை ஒடுக்க ராணுவம் களமிறக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த நிலையில், ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்டோர் வன்முறையை கைவிடுமாறு போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இப்போது வன்முறை குறைந்து விட்டதாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஜார்ஜ் பிளாய்டின் சொந்த நகரமான ஹூஸ்டனில் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அவரது மரணம் வீணாய்ப்போகாது என அந்த நகர மேயர் சில்வெஸ்டர் டர்னர் கூறினார்.
வாஷிங்டனில் நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். வெள்ளை மாளிகையை நோக்கி போராட்டக்காரர்கள் அணிவகுத்த போது, ஹெலிகாப்டரில் ராணுவம் கண்காணித்தது.
நியுயார்க்கில் மேன்ஹாட்டன் பகுதியில் போக்குவரத்துக்கு போராட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தினர். லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா, அட்லாண்டா மறறும் சியாட்டில் நகரங்களிலும் பெரிய அளவில் பேரணிகள் நடைபெற்றன. அதே நேரத்தில் குறிப்பிடும்படியாக வன்முறை சம்பவம் அரங்கேறியதாக தகவல் இல்லை.