உலக செய்திகள்

துபாயில், குளோபல் வில்லேஜ் கண்காட்சி தொடங்கியது

இந்தியா, ஈராக் உள்ளிட்ட 26 நாடுகள் பங்கேற்ற குளோபல் வில்லேஜ் கண்காட்சி துபாயில் நேற்று தொடங்கியது.

தினத்தந்தி

குளோபல் வில்லேஜ் கண்காட்சி

துபாய் நகரில் முக்கிய பொழுதுபோக்கு கண்காட்சிகளில் ஒன்றாக குளோபல் வில்லேஜ் கண்காட்சி திகழ்ந்து வருகிறது. இந்த கண்காட்சி 26-வது ஆண்டாக நேற்று தொடங்கியது. இதில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், சவுதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட 26 நாடுகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஈராக் நாடு புதிதாக அரங்கினை அமைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 80 நாடுகளின் கலை, கலாசாரம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து குளோபல் வில்லேஜ் கண்காட்சியின் வாடிக்கையாளர் சேவைக்கான மேலாளர் முகம்மது இசாக் கூறியதாவது:-

சாதனை நிகழ்ச்சிகள்

இந்த கண்காட்சிக்கு அமீரகம் மட்டுமல்லாது வளைகுடா நாடுகளின் பல்வேறு இடங்களில் இருந்தும், உலகின் பிற நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகின்றனர். இந்த கண்காட்சிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட பொதுமக்கள் அமர்வதற்கு ஏற்ற வகையில் கூடுதல் இருக்கைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 25-வது ஆண்டு கண்காட்சியில் 25 கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதேபோல் இந்த ஆண்டும் பல்வேறு சாதனை நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்த கண்காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணம் 20 திர்ஹாம் ஆகும். எனினும் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை எடுப்பவர்களுக்கு 15 திர்ஹாம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

அமீரகத்தில் கொரோனா பாதிப்பு பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டு இந்த கண்காட்சி தொடங்கப்படுகிறது. இதன் மூலம் பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் எக்ஸ்போ 2020 கண்காட்சி நடந்து வருவதால் வெளிநாட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கேற்ற வகையில் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை