வாஷிங்டன்,
வடகொரியா தொடர்ந்து 5 முறை அணு குண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. 6வது அணுகுண்டு சோதனையை நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. அணு ஆயுத சோதனையை ஒருபோதும் கைவிட முடியாது என்று அந்த நாடு உறுதிபட தெரிவித்து விட்டது.
எனவே வடகொரியாவை தனிமைப்படுத்துகிற வகையில் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அமெரிக்கா வலியுறுத்த முடிவு செய்துள்ளது.
சீனா எச்சரிக்கை
வடகொரியாவின் தொடர் அத்துமீறல்கள் அதன் ஆதரவு நாடான சீனாவுக்கும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
இனியும் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டால், பொருளாதார தடை விதிப்போம் என்று வடகொரியாவிடம் சீனா எச்சரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறி உள்ளார்.
வடகொரியா விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
டிரம்ப் திட்டவட்டம்
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவி ஏற்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் வடகொரியாவுடன் போருக்கு வாய்ப்பு இருப்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வடகொரிய விவகாரம், ஒரு மிகப்பெரிய சண்டையில்தான் போய் முடிவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சமாதானமான முறையில்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகிறேன்.
வடகொரிய விவகாரத்தில் ராஜ்யரீதியில் தீர்வு காண்பதற்குத்தான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது மிகவும் கடினமானது.
வடகொரியா என்னைப் பொறுத்தமட்டில் மிகப்பெரிய உலகளாவிய சவாலாக திகழ்கிறது.
ஜின்பிங்குக்கு பாராட்டு
வடகொரிய விவகாரத்தில் சீன அதிபர் ஜின்பிங் கடுமையாக முயற்சிக்கிறார். அவர் நிச்சயம் கொந்தளிப்பு, மரணங்களை காண விரும்பவில்லை. அவர் மிகவும் நல்ல மனிதர். அவரைப்பற்றி நன்கு தெரிந்துகொண்டேன். அவர் சீனாவையும், சீன மக்களையும் நேசிக்கிறார். வடகொரிய விவகாரத்தில் அவரால் ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பகுத்தறிந்து செயல்படுகிறாரா?
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை பகுத்தறிந்து செயல்படுகிற ஒரு அறிவாளியாக பார்க்கிறீர்களா? என்று டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு டிரம்ப் பதில் அளிக்கையில், அவர் மிகக்குறைந்த வயதில் நாட்டை ஆள வந்து விட்டார். அவருக்கு 27 வயதுதான். அவர் தந்தை மறைந்து விட்டதால், அவர் ஆட்சிப்பொறுப்புக்கு வந்து விட்டார். அவர் பகுத்தறிந்து செயல்படுகிறாரா, இல்லையா என்பதில் கருத்து இல்லை. இருப்பினும் அவர் அறிவார்ந்தவர் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
போர் மூண்டால்?
வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுத்தால், அந்தப் போரில் வடகொரியாவும் சரியான பதிலடி கொடுக்கும் ஆபத்து உள்ளது. அது தென்கொரியா, ஜப்பான் நாடுகளிலும் உயிரிழப்பை ஏற்படுத்தும். அவ்விரு நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.