லாகூர்,
பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மாகாணம் பகவல்பூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பஞ்சாப் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அந்த பகுதியை முற்றுகையிட்டனர்.
பயங்கரவாதிகளை சரண் அடையுமாறு கூறினர். அதை ஏற்க மறுத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் சுட்டனர். துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். 3 பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். அந்த இடத்தில், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், வெடிபொருட்கள் சிக்கின.
சிறுபான்மை ஷியா பிரிவினரின் வழிபாட்டு தலங்களை தாக்கி, கலவரத்தை தூண்டிவிட அந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.