வாஷிங்டன்,
எச்1 பி விசாக்களுக்கு இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே பெருத்த வரவேற்பு உள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசா நடைமுறையின் கீழ் பணி அமர்த்துவது வழக்கம்.
அமெரிக்க அரசு, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் எச்1 பி விசாக்கள் வழங்குகிறது. இது தவிர்த்து அமெரிக்காவில் உயர்கல்வி பெற்றவர்கள் 20 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இந்த விசா வழங்கப்படும்.
இந்த நிலையில், வரும் அக்டோபர் 1ந் தேதி தொடங்குகிற 2019ம் நிதி ஆண்டுக்கான எச்1 பி விசாக்களை பெறுவதற்கு விண்ணப்பங்களை பெறுகிற செயல்முறை அடுத்த மாதம் (ஏப்ரல்) 2ந் தேதி தொடங்கும்.
இதை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு அறிவித்து உள்ளது.
மேலும், வரும் செப்டம்பர் 10ந் தேதி வரை அனைத்து எச்1 பி விசாக்களுக்கான பிரிமியம் பிராசசிங் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த காலகட்டத்தில் எச்1 பி விசா பிரிமியம் பிராசசிங் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஒரு விண்ணப்பதாரர் தனது எச்1 பி விசா விண்ணப்பத்தை பிரிமியம் பிராசசிங் நடைமுறையை பின்பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டால், இதுபற்றி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு 15 நாளில் முடிவு எடுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.