உலக செய்திகள்

ஹைதி அதிபர் கொல்லப்பட்டதில் கூலிப்படையினர் 4 பேர் சுட்டுக்கொலை; 2 பேர் கைது

ஹைதி அதிபர் சுட்டுக்கொல்லப்பட்டதில் கூலிப்படையினர் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஹைதி அதிபர் சுட்டுக்கொலை

கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் (வயது 53) நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்த பயங்கர சம்பவத்தின்போது அவரது மனைவி மார்டின் மோயிஸ் படுகாயம் அடைந்தார்.அவருக்கு அங்கு முதலில் முதலுதவி அளித்துவிட்டு, புளோரிடாவுக்கு ஆம்புலன்ஸ் விமானத்தில் எடுத்துச்சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.இந்த சம்பவம் அந்த நாட்டை உலுக்கி உள்ளது.

கூலிப்படையினர் 4 பேர் சுட்டுக்கொலை

இந்த கொலையில் சந்தேக குற்றவாளிகள் என கருதப்படுகிற 4 பேரை அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொன்றனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக அந்த நாட்டின் உயர் போலீஸ் அதிகாரி லியோன் சார்லஸ் கூறியதாவது:-

அதிபர் படுகொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிற கூலிப்படையினர் 4 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று விட்டனர். 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எஞ்சிய தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தேடிப்பிடிக்கும் வேட்டையில் போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களும் கொல்லப்படுவார்கள் அல்லது உயிருடன் பிடிக்கப்படுவார்கள்.இந்த சம்பவத்தின்போது 3 போலீசார் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர். சந்தேக நபர்கள் சம்பவ இடத்தை விட்டு வெளியேறும்போது அவர்களை தடுத்து விட்டோம். அப்போது இருந்து அவர்களுடன் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நெருக்கடி நிலை பிரகடனம்

இதற்கிடையே அந்த நாட்டில் தற்போது தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தற்காலிக பிரதமர் கிளாட் ஜோசப் அறிவித்தபோது, மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் ஹைதியில் போலீஸ் அதிகாரத்தை ராணுவம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இது வெறுக்கத்தக்க செயல் என குறிப்பிட்டுள்ளார். இந்த கொடிய சம்பவம் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பூட்டிய அரங்கில் நேற்று விவாதித்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு