ரியாத்,
சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துலாஸிஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.
பின்னர் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியா எரிசக்தி துறை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பு துறையில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் கூறினார். விநியோகங்களை ஊக்கப்படுத்த சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் முதலீடு செய்ய முன் வரவேண்டும் என்று பேசியிருந்தார்.
பின்னர் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் பிரதமர் மோடிக்கு இரவு உணவு விருந்து அளித்தார். இதில் கலந்து கொண்ட பின்னர் தனது டுவிட்டரில் மோடி வெளியிட்ட பதிவில், சவுதி அரேபிய பட்டத்து இளவரசரை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியானது. சவுதி அரேபியா மீது அவர் கொண்டுள்ள தொலைநோக்கு பார்வை அபாரமானது. நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தினோம். இருநாடுகளுக்கும் இடையேயான வலுவான நட்பு மக்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.