நியூயார்க்,
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஏரோபிளாட் விமானம் ஒன்று புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.
இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் மர்ம அழைப்பு வந்தது. அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த 250 பயணிகளும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இதன்பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விமானத்தில் சோதனையிட்டனர்.
ஆனால், விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் தொலைபேசி அழைப்பு வெறும் புரளி என்பது தெரியவந்தது. எனினும், இதனால் விமான சேவையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
விமான நிலையம் முழுவதும் திறந்திருக்கிறது என்றும் காலதாமதமின்றி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்றும் விமான நிலையம் டுவிட்டர் வழியே பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.