உலக செய்திகள்

பிணைக்கைதியாக இருந்த மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய செல்போன் விளையாட்டு..!

பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் செல்போன் விளையாட்டின் மூலம் உயிர்பிழைத்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் 80 வயது மூதாட்டி டெனிஸ் ஹோல்ட். இவர் கடந்த சில மாதங்களாக 'வேர்டுலே' (Wordle) எனப்படும் செல்போன் விளையாட்டு ஒன்றை தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தினமும் அந்த விளையாட்டில் பெறும் ஸ்கோரை தன்னுடைய மகளுக்கு அனுப்பும் வழக்கமும் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இரவு ஹோல்ட்டின் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு நுழைந்த ஒரு நபர் கத்தரிக்கோலை காட்டி மிரட்டி ஹோல்ட்டை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளார். மறுநாள் காலையில் ஹோல்ட்டின் மூத்த மகள் மெரிடித், எப்போதும் போல் விளையாட்டின் ஸ்கோரை ஹோல்ட் அனுப்பாததால் சந்தேகமடைந்துள்ளார்.

உடனே மெரிடித் சிகாகோ போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் ஹோல்ட் நலமாக இருக்கிறாரா என்பதை சோதிக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு நபர் ஹோல்ட்டை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் போலீசார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு அந்த நபரிடமிருந்து ஹோல்ட்டை மீட்டுள்ளனர்.

அந்த நபர் 32 வயதுடைய ஜேம்ஸ் டேவிஸ் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஒரு செல்போன் விளையாட்டின் மூலமாக ஹோல்ட் உயிர்பிழைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது