நியூயார்க்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நலமா மோடி? நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கலந்து கொள்கிறார்.
இந்தநிலையில் ஹூஸ்டன் நகரை இமெல்டா என்ற சக்திவாய்ந்த புயல் புரட்டிப்போட்டு விட்டது. இடைவிடாது பெய்து வரும் தொடர் மழைக்காரணமாக, சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. புயலின் போது மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி உள்ளது. தொடர் மழைக்காரணமாக ஹூஸ்டன் நகரில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஹூஸ்டன் நகரின் தென்கிழக்கு பகுதியில் வசித்து வந்த ஒருவர், தனது குதிரையை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேலும் ஒரு நபர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தார்.
பிரதமர் மோடியின் நலமா மோடி? நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில் ஹூஸ்டன் நகரில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. எனினும் நிகழ்ச்சிக்கு எவ்வித தடையும் இருக்காது என்றும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.