வாஷிங்டன்
2020ம் ஆண்டு டிசம்பரில் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி சர்வதேச கூட்டிணைப்பான ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த புகைப்படத்தில் அரிய விண்வெளி நிகழ்வான ஐன்ஸ்டீன் வளையம் எனப்படும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஐன்ஸ்டீன் வளையத்திற்கு மோல்டன் ரிங் என பெயரிடப்பட்டது.
ஐன்ஸ்டீன் வளையம் எனப்படுவது தொலைதூர விண்மீன் மண்டலத்தில் இருந்து வரும் ஒளி இடையில் உள்ள ஈர்ப்பு விசையால் பார்ப்பவர்களுக்கு வளைந்து வட்ட வடிவ வளையம் போல் தோன்றும். இந்த நிகழ்வு முதன் முதலில் 1912 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் பெயராலே இந்த நிகழ்வு குறிக்கப்படுகிறது.
ஹப்பிள் வெளியிட்ட இந்த புகைப்படத்தை பயன்படுத்தி, 9.4 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் விண்மீன் திரள் உள்ளதாக வானியலாளர்கள் கண்டுபிடுத்துள்ளனர். புதிய நட்சத்திரங்கள் உருவாவதற்கு காரணமான மூலக்கூறு வாயு, துல்லியமான சிவப்பு மாற்றத்தைக் கணக்கிட எங்களுக்கு உதவியது. இதன் மூலம் நாம் உண்மையில் மிகவும் தொலைதூரத்தில் உள்ள விண்மீன் திரளைப் பார்க்கிறோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என்று மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டின் மாணவர் நிகோலாஸ் சுல்செனோயர் கூறினார்.
மேலும், விண்மீன் திரளின் உருப்பெருக்கம் 20 மடங்கு என்பதால் இது, ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் கவனிக்கும் திறனை 48 மீட்டர் தொலைநோக்கியின் திறனுக்கு சமமானதாக ஆக்குகிறது. இது தற்போது திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய தொலைநோக்கியை விட பெரியது என ஹப்பிள் வானியல் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.