கொழும்பு
கொழும்பில் ரணில் விக்ரமசிங்கே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கையில் நிலவும் கடும் வறட்சியால் பொருளாதார பிரச்சினை மற்றும் மறு சீரமைப்பு பணியில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால்தான் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டது.
இந்த தேர்தல் மூலம் மக்களின் மனநிலையை அறிய முடிந்தது. இந்த தேர்தல் முடிவு எங்களுக்கு பின்னடைவாக இருந்தாலும் அதை உரிய நேரத்தில் சரி செய்வோம். பிரதமர் என்ற முறையில் எனக்கு அதில் முக்கிய பொறுப்பு உள்ளது.
இலங்கையில் தற்போது கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. நான் பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறேன். ஏற்கனவே அதிபர் மைத்ரி பால சிறிசேனாவை சந்தித்து பேசி விட்டேன். அடுத்த வாரம் அவரை மீண்டும் சந்திக்கிறேன். அப்போது மந்திரி சபையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.