உலக செய்திகள்

போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச இருக்கிறேன் கமல்ஹாசன் பேட்டி

போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச இருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.

கடலூர்,

கடலூர் சாவடியில் உள்ள அக்ஷரா வித்யாஸ்ரம் பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

மாணவர்களாகிய உங்கள் கையில்தான் புதிய இந்தியா உள்ளது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களிடம் உள்ள கேள்விக்கான பதிலை நீங்களே தேடி கண்டுபிடியுங்கள். அப்போது தான் சமுதாயம் மேம்படும். உங்களுக்கு இந்த பள்ளியில் கல்வி கற்றுக்கொடுப்பது போல் எனக்கும் கல்வி கற்றுக்கொடுத்திருந்தால் நான் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியிருக்கமாட்டேன்.

மாணவர்களுக்கு பாலியல் கல்வி அவசியம் என்பதைவிட அரசியல் முக்கியம். ஏன் என்றால் நீங்கள் இந்தியாவின் பிரஜைகள். அதனால் தான் பள்ளியில் படிக்கும்போதே வரலாறு, சமூக அறிவியல் போன்ற பாடங்களை கற்றுக் கொடுக்கிறார்கள்.

அரசியலை கேவலமாக நினைத்துவிடாதீர்கள். அதை ஒரு கருவியாக நினைத்துக் கொள்ளுங்கள். நாளை அது உங்களுக்கு பயன்படும். கல்வி உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட அரசியலும் முக்கியம். ஆகவே அதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள். நான் கட்சி தொடங்கும்போது பிடித்தவர்களை மட்டும் சேர்க்கவில்லை. கட்சிக்கு தேவையானவர்களை சேர்த்து இருக்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

கடலூர் அருகே குணமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

25 வருடமாக கிராமசபை என்ற இந்த ஆயுதத்தை பூட்டி வைத்துள்ளர்கள். கிராம சபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கை நீங்கள் கேட்க வேண்டும்.

உதாரணத்துக்கு கஜா புயல் வந்தது, மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. தாமதப்படுத்திவிட்டதாக வருத்தப்பட்டார்கள். ஆனால் பொங்கல் வந்தது. 2 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது. அவசரத்துக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து இருக்கலாம். கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்டால் தான் கோட்டை வரை உங்கள் ஆட்சி நடக்கும்.

அரசாங்கம் வேலை செய்ய வந்தவர்கள், சரியாக செய்யவில்லை என்றால் அவர்களை வெளியே அனுப்பலாம். ஓட்டுக்கு பணம் வாங்கினால், நீங்கள் அவர்களை கேள்வி கேட்க முடியாது. 5 ஆண்டுகளை அடகு வைக்காதீர்கள். ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வாங்காதீர்கள். உங்கள் ஓட்டுகளை விற்காதீர்கள்.

உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்றால் அதிகாரிகள் வேலை செய்ய முடியாது. முதலில் உள்ளாட்சி தேர்தலை நடத்துங்கள். தேர்தல் தள்ளிவைப்பது மேலிடத்தில் யாரோ செய்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருக்காதீர்கள். உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தாய்மார்கள் குரல் கொடுங்கள்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

பின்னர் அழகியநத்தம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகையில், 2 வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். ஒன்று, கண்டிப்பாக நீங்கள் ஓட்டுபோட வேண்டும். இரண்டு, கிராம சபை கூட்டத்தில் நீங்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும். அப்படி கலந்துகொண்டால், உங்கள் கிராமம் செழிப்பாகி விடும். அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால் உரிமையை விட்டுக்கொடுக்காதீர்கள் என்றார்.

பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் கிராம சபை தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் பற்றி அவர்களிடம் பேச இருக்கிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும். இந்த அரசுக்கு மக்கள், கிராமங்கள் என எதிலும் அக்கறை இல்லை என்றார்.