உலக செய்திகள்

குல்பூஷண் ஜாதவ் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் பதிலளிக்க சர்வதேச நீதிமன்றம் கால நிர்ணயம்

குல்பூஷண் ஜாதவ் விவகாரம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் பதிலளிக்க சர்வதேச நீதிமன்றம் கால அவகாசம் நிர்ணயம் செய்து உள்ளது. #KulbhushanJadhav

தி ஹேக்,

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ் (வயது 46). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ரா அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது.

இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் கடந்த 8-ந் தேதி வழக்கு தொடர்ந்தது. குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றிவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று இந்தியா கவலையும் தெரிவித்தது.

இதனால், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சர்வதேச கோர்ட்டு பாகிஸ் தானுக்கு உத்தரவிட்டது. இந்தியா தரப்பில் வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து உள்ளது. அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டது. பாகிஸ்தான் தரப்போ, வியன்னா பிரகடனத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக உளவு பார்ப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை அணுகுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை சர்வதேச கோர்ட்டை இந்தியா அரசியல் மேடையாக்கிவிட்டது என்று வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவிற்கு விதித்த மரண தண்டனையை தடை செய்து உத்தரவிட்டது.

வியன்னா ஒப்பந்தப்படி இந்தியா குல்பூஷண் ஜாதவ்வை சந்திக்க தூதரக அணுகுமுறைக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. ஆனால் இதுவரையில் இந்தியா தூதரக ரீதியில் குல்பூஷண் ஜாதவை அணுக பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை.

இப்போது இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்கள் தரப்பு பதிலை தெரிவிக்க கால அவகாசத்தை சர்வதேச நீதிமன்றம் நிர்ணயம் செய்து உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் முறையே 17 ஏப்ரல் 2018 மற்றும் 17 ஜூலை 2018-ல் தங்கள் தரப்பு பதிலை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளது. இருதரப்பு பதில் மற்றும் வழக்கின் சூழ்நிலையை ஆய்வு செய்து சர்வதேச நீதிமன்றம் முடிவை எடுக்கிறது. குல்பூஷண் ஜாதவை ஈராக்கில் இருந்து கடத்திவந்து பாகிஸ்தான் சித்தரவதை செய்கிறது என்பது இந்திய தரப்பு குற்றச்சாட்டாகும்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு