புதுடெல்லி,
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப், அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் நான் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் நிறுவிய இந்த இயக்கம் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஐநா சபை லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பட்டியலில் சேர்த்தது. பாகிஸ்தானும் கடந்த 2002 ஆம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை தடை செய்தது. அப்போது, பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் முஷரப்தான் என்பது கவனிக்கத்தக்கது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை, கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டுக்காவலில் இருந்து பாகிஸ்தான் விடுவித்தது. இதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவால் தலைக்கு 6 கோடி நிர்ணையிக்கப்பட்ட ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்து தனது உண்மை முகத்தை பாகிஸ்தான் வெளியில் காட்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வரும் நிலையில், அந்நாட்டு முன்னாள் அதிபர் முஷரப் வெளிப்படையாகவே, ஹபீஸ் சயீத்தை ஆதரித்து இருப்பது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பர்வேஸ் முஷரப் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது:- லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் நான். அந்த இயக்கமும் என்னை விரும்புகிறது என்பதை நான் அறிவேன். காஷ்மீர் விவகாரத்தில் ஹபீஸ் சயீத் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். ஹபீஸ் சயீத்தின் இந்த ஈடுபாட்டை நான் ஆதரிக்கிறேன். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை நாங்கள் தான் தடை செய்தோம். அப்போது வேறு மாதிரியான சூழல் இருந்ததால் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.அமைதியை நோக்கி எங்கள் நடவடிக்கை சென்று கொண்டிருந்ததால், மத போராளிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் கருதினேன். உண்மையாக ஹபீஸ் சயீத் பற்றி அப்போது நான் முழுமையாக அறிந்து இருக்கவில்லை. ஹபீஸ் சயீத் பற்றி நான் முழுமையாக அறிந்து இருந்தால், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை அப்போது நான் தடை செய்து இருக்க மாட்டேன்.
நான் தாராளவாத மற்றும் மிதவாத கொள்கை உடையவன். ஆனால், நான் இத்தகைய கொள்கையை கொண்டிருப்பதால் அனைத்து மத தலைவர்களுக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டவன் என்று அர்த்தம் ஆகாது இவ்வாறு அவர் தெரிவித்தார்.