உலக செய்திகள்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவக்கம்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியுள்ளது. #PakPoll

இஸ்லமபாத்,

பாகிஸ்தானில் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடக்கிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர்.இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

ஓட்டு பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் மாகாண தேர்தல்களுக்கான வாக்கு பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கி உள்ளது.

வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமுடம் வாக்களித்து வந்த நிலையிலும், சில இடங்களில் வன்முறை நடைபெற்றது. குறிப்பிடும் படியாக குவெட்டா நகரில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் தமீர் இ நவ் கல்வி பள்ளிக்கூட காம்ளெக்சில் உள்ள வாக்கு சாவடிக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 31 பேர் பலியாகி உள்ளனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. மாலை 7 மணிக்கு பிறகு தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாக வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என கூறப்படுகிறது.