லாகூர்,
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் அந்த நாட்டில் இருந்து தப்பி லண்டனில் வசித்து வருகிறார். அவருக்கு எதிராக வழக்குகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், அவர் மீது லண்டனில் நேற்று தாக்குதல் நடந்து உள்ளது என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தாக்குதல் நடத்திய நபர் ஆளும் பி.டி.ஐ. கட்சியை சேர்ந்தவர் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.
பாகிஸ்தானில் உள்ள பேக்ட் போகஸ் என்ற ஊடக செய்தியாளர் அகமது நூரானி வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் தொண்டரால் நவாஸ் ஷெரீப் தாக்கப்பட்டார் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் நவாஸ் ஷெரீப்பின் காவலர் காயமடைந்து உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள சூழலில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றால், பிரதமர் பதவிக்கு, நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியை சேர்ந்த ஷபாஸ் ஷெரீப் முக்கிய போட்டியாளராக இருந்திடுவார்.