இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 25ந் தேதி தேர்தல் நடந்தது. உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகளை பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் நேற்றுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
272 தொகுதிகளில் 270 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணத்தால் தேர்தல் ரத்தானது. இப்போது 270 தொகுதிகளுக்கும் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.
இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்இஇன்சாப் (பி.டி.ஐ.) கட்சி 115 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ளது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு (நவாஸ்) 64 இடங்கள் கிடைத்து உள்ளன.
மற்றொரு முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
பல்வேறு மத கட்சிகளை உள்ளடக்கிய முத்தாஹிடா மஜ்லிஸ் இ அமல் (எம்.எம்.ஏ.) 12 இடங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சியும், புதிய கட்சியான பலுசிஸ்தான் அவாமி கட்சியும் தலா 4 இடங்களைப் பிடித்தன.
சிந்து மாகாணத்தை சேர்ந்த பெரும் ஜனநாயக கூட்டணி (ஜி.டி.ஏ.) 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
சுயேச்சைகள் 12 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எஞ்சிய 14 இடங்களை சிறிய கட்சிகள் கைப்பற்றின.
இந்த தேர்தலில் மோசடிகள் நடைபெற்று இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தனது தோல்வியை ஒப்புக்கொண்டது.
இது குறித்து நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிடுகையில் தங்களது கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என கூறினார்.
எனவே இம்ரான்கான் ஆட்சி அமைப்பதற்கான வழி பிறந்து உள்ளது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக இம்ரான் கான் தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர் சார்பில் பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது.
இம்ரான்கானின் நம்பிக்கைக்கு உரிய ஜஹாங்கிர் கான் தாரினுக்கு சுயேச்சை எம்.பி.க்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது ஆதரவினை திரட்டுகிற பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இவர் முத்தாஹிடா காமி மூவ்மெண்ட் பாகிஸ்தான் (எம்.கியூ.எம்.பி.) கட்சி தலைவர் காலித் மக்பூல் சித்திக்குடன் பேச்சு நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே பாகிஸ்தான் தெஹ்ரீக்இஇன்சாப் (பி.டி.ஐ.) கட்சி செய்தி தொடர்பாளர் பவத் சவுத்ரி, தனது கட்சி 137 எம்.பி.க்களின் ஆதரவை திரட்டி விட்டதாக கூறி உள்ளார். எனவே தனது கட்சி எளிதாக ஆட்சி அமைக்கும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தானில் புதிய மத்திய அரசை அமைப்பதுடன், பஞ்சாப் மாகாணத்திலும் தனது கட்சியே ஆட்சி அமைக்கும் என அவர் கூறினார்.
ஏற்கனவே கைபர் பக்துங்வா மாகாணத்திலும் வெற்றி பெற்று உள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துங்வா மாகாண முதல்மந்திரிகள் யார் என்பதை இம்ரான் கான் முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அரசியல் சாசனப்படி தேர்தல் நடந்து 21 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கூட்டி, புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க வேண்டும், சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே அதற்குள் புதிய அரசை இம்ரான் கான் அமைத்தாக வேண்டும். அதில் அவர் தீவிரமாக உள்ளார்.