இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோத முறையில் பணபரிமாற்றம் நடைபெறுவது பற்றிய வழக்கு ஒன்று நடந்து வருகிறது.
இதுபற்றி விசாரணை மேற்கொண்டு, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன் அந்நாட்டின் மத்திய புலனாய்வு துறை (எப்.ஐ.ஏ.) பட்டியல் ஒன்றை சமர்ப்பித்தது. அதில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இவர்களில் மற்றவர்களின் பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்த 44 பேர் கொண்ட பட்டியல் இடம் பெற்று உள்ளது. இவர்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கானும் என்பவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதனை அடுத்து அவரது வீட்டு முகவரிக்கும் மற்றும் அவரது இமெயிலுக்கும் நோட்டிஸ் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அவர் வீட்டில் இல்லை என்றும் வெளிநாட்டுக்கு சென்று உள்ளார் என்றும் அவரது வீட்டு பணியாளர் தெரிவித்துள்ளார்.