பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 22-ந்தேதியில் இருந்து இலங்கையில் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரை சந்தித்து பேசவும், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் ஏற்பாடு ஆகி உள்ளது. அத்துடன் இலங்கை நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் 24-ந்தேதி பேசவும் ஏற்பாடு ஆகி இருந்தது.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பேசவிருந்தது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவல் பிரச்சினை காரணமாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஜெயந்த் கொலம்பேஜ் கேட்டுக்கொண்டதற்கிணங்க இம்ரான்கான் பேச்சு ரத்தாகி உள்ளதாக உள்ளூர் நாளேடு ஒன்று கூறுகிறது.
இருப்பினும், இலங்கை அரசில் இடம் பெற்றுள்ள பலர், இம்ரான்கான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினால், இந்தியா உடனான உறவில் அது பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதே உள்ளூர் ஊடகம் கூறுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பேச வாய்ப்பு அளித்தால் அவர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினால் அது இந்தியாவை வருத்தப்படவைக்கும் என்பதுடன் மோடிக்கு சமமான இடத்தில் இம்ரான்கானை வைப்பதாக அமைந்து விடும் என்பதாலும் அவரது பேச்சு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.