வாஷிங்டன்,
கடந்த சனிக்கிழமை காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் புகுந்து பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ-முகமது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் பலியாயினர். இதேபோல் கடந்த 12-ந் தேதி ஸ்ரீநகர் கரன்நகர் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமிற்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒரு போலீஸ்காரரை சுட்டுக் கொன்றனர். இதில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுபோன்ற தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா முழுவதும் தொடர்ந்து ஈடுபடலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதுபற்றி அமெரிக்க உளவுத்துறையின் இயக்குனர் டான் கோட்ஸ் அமெரிக்க செனட் தேர்வுக் குழு கூட்டத்தில் பேசியதாவது:-
அணு ஆயுதங்கள் குவிப்பு
பயங்கரவாதிகளுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதை தவிர்க்கிறது. அதே நேரம் அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் விதமாகவும் அணு ஆயுதங்களை தயாரித்து பெரும் அளவில் குவித்து வருகிறது. சீனாவுடன் நெருக்கமான உறவை பராமரித்து வருகிறது.
பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. தங்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகள் இந்தியாவின் மீதும், ஆப்கானிஸ்தான் மீதும் தொடர் தாக்குதலை நடத்த சதித்திட்டம் தீட்டி வருகின்றனர். இதில் அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் பாகிஸ்தான் செயல்படுகிறது.
தாக்குதல் நடத்த சதி
அண்டை நாடான இந்தியாவின் வலுவான பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தானின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதனால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக மாறி வருகிறது. மேலும், பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவது இப்பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் தொடர்ந்து பதற்ற நிலையே காணப்படுகிறது. அதனால்தான் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல்களை அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அல்லது பயங்கரவாதிகள் தொடர்ந்து எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் வன்முறைகளில் ஈடுபடலாம்.
அமெரிக்கா கொடுத்த நெருக்கடி காரணமாகவே தற்போது பாகிஸ்தான் தனது நாட்டில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.