உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனாவை எதிர்த்து போராட ரூ.3 லட்சம் கோடி - டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரசை எதிர்த்து போராட ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் கோடி பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே பதறுகிற அளவுக்கு, அது உயிர்க்கொல்லியாக அமைந்துள்ளது.

உலகளவில் இந்த வைரஸ் நோய், 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோயின் மையப்புள்ளியாக இப்போது ஐரோப்பா மாறி உள்ளது.

இந்தநிலையில், வல்லரசு நாடான அமெரிக்காவையும் இந்த வைரஸ் நோய் ஆட்டிப்படைக்க தொடங்கி உள்ளது. அந்த நாட்டில் உள்ள 50 மாகாணங்களில் 46 மாகாணங்கள், கொரோனா வைரசின் ஆதிக்கப்பிடியில் சிக்கி திணறுகின்றன.

2 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் நோய் தொற்றியுள்ளது. 47 பேர் இங்கு பலியாகி இருக்கிறார்கள்.

இங்கிலாந்து தவிர்த்து பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து யாரும் அமெரிக்காவில் நுழைய முடியாதபடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கும். இது நேற்று முன்தினம் இரவு அமலுக்கு வந்துள்ளது.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ரோஸ் பூங்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் தேசிய நெருக்கடி நிலையை அமல்படுத்தி உள்ளதாக அறிவித்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, மத்திய அரசின் முழு அதிகாரத்தையும் கட்டவிழ்த்து விட நான் தேசிய நெருக்கடி நிலையை இன்று (நேற்று முன்தினம்) அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன் என குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தேசிய நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என்பது அமெரிக்காவில் ஒரு அபூர்வமான நிகழ்வு ஆகும்.

அமெரிக்காவில் தேசிய அவசர நிலையை அறிவித்திருப்பதனால் என்ன பலன் என்று கேட்டால்-

* கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை எதிர்த்து நின்று போராடுவதற்கு 50 பில்லியன் டாலர் நிதியை (சுமார் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் கோடி) பயன்படுத்தலாம்.

* மத்திய நெருக்கடி நிலை மேலாண்மை முகமையானது, மாகாணம் மற்றும் உள்ளூர் அரசு நிர்வாகங்களுக்கு உதவவும், பிரச்சினைக்கான தீர்வு காண மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

* நெருக்கடி கால செயல்பாட்டு மையங்கள், மாகாணங்கள் தோறும் அமைக்கப்படுகின்றன. பொதுமக்களின் தேவையை சந்திக்கிற வகையில், ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் அவசர தயார் நிலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* சுகாதாரம் மற்றும் மனித சேவைகளின் செயலாளருக்கு பரந்த புதிய அதிகாரம் வழங்கப்படுகிறது. டாக்டர்கள், ஆஸ்பத்திரிகள், சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் நோயாளிகளின் நலன் காக்க செயல்பட தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருவதையொட்டி, அங்கு பல்வேறு சலுகைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படடுள்ளன.

மத்திய அரசு நிறுவனங்கள், மாணவர்களுக்கு வழங்கிய அனைத்து கல்வி கடன்களுக்குமான வட்டியை ஜனாதிபதி டிரம்ப் தள்ளுபடி செய்துள்ளார்.

அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக செய்து கொள்வதற்கும், இந்த வைரஸ் நோய் தாக்கிய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதற்கும் வகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. செனட் சபையும் இதற்கு ஒப்புதல் வழங்கியவுடன், ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டவுடன் சட்டமாகி விடும்.

கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், உலகம் முழுவதும் உள்ள சுவாமி நாராயண் கோவில்களை மூடுவதற்கும், வழக்கமான செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் பயணியர் கப்பல் சேவையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி இருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு லூசியானா மாகாணத்தில் அடுத்த மாதம் 4-ந்தேதி நடைபெற இருந்த கட்சி தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது.

* உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிரான போரை அறிவிக்குமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

* சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 3,189 ஆகவும், பாதித்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்து 824 ஆகவும் அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,266 ஆகவும், பாதித்தவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 660 ஆகவும் உயர்ந்துள்ளது.

* ஸ்பெயின் நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,500 பேருக்கு இந்த வைரஸ் நோய் பாதித்து இருப்பது உறுதியானது. இதன்மூலம் அங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 5,753 ஆனது.

* மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானை இந்த வைரஸ் நோய் அதிகமாக தொற்றியுள்ளது. இந்த வைரசுக்கு அங்கு மேலும் 97 பேர் பலியாகி உள்ளனர். இதன்காரணமாக அங்கு இந்த நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 611 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் தாக்கியோரின் எண்ணிக்கையும் 12 ஆயிரத்து 729 ஆக அதிகரித்து இருக்கிறது.

* சவுதி அரேபியா தனது நாட்டுக்கு வழக்கமாக வருகிற அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் 2 வார கால தடையை அதிரடியாக விதித்துள்ளது.

* கொலம்பியாவில் இந்த வைரஸ் நோய் 16 பேருக்கு தொற்றியுள்ள நிலையில், வெனிசூலாவுடனான எல்லையை அந்த நாடு மூடி உள்ளது.

* அனைத்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் தனது அண்டை நாடான வெனிசூலாவில் இருந்தும் வருகிற விமானங்களுக்கு வெனிசூலா தடை விதித்துள்ளது.

* ரஷிய நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

* ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் நோய் மேலும் 3 பேருக்கு தொற்றிக் கொண்டுள்ள நிலையில், இந்த நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

* மனைவி சோபிக்கு, கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், தனது நாட்டினர் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடை விதித்துள்ளார்.

* இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய 5 நாடுகளை சேர்ந்தவர்கள் கம்போடியா வர 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தென்கொரியாவில் மேலும் புதிதாக 107 பேரை இந்த வைரஸ் நோய் பாதித்துள்ளது. இதனால் அங்கு இந்த நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 8,086 ஆக உயர்ந்துள்ளது.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் மேலும் 34 பேருக்கு இந்த வைரஸ் நோய் தொற்றிக்கொண்டுள்ளதால், இதன் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 98 ஆகி உள்ளது.

* இந்தோனேசியாவில் 27 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் பாதித்துள்ளது. அங்கு இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 96 ஆனது.

* ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் மேலும் 23 பேருக்கு பரவி உள்ளதால், இதன் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்